கார்த்திக் நீலகிரி
Muralidharan Kasi Viswanathan
மாபெரும் இந்தியத் துயரம்
---------------------
"என்னிடம் பணம் இல்லை. என் வீட்டு உரிமையாளர் என்னிடம் வாடகை கேட்டார். என்னால் வாடகை கொடுக்க முடியவில்லை என்றால், வீட்டை விட்டு காலி செய்யுமாறு கூறினார். நான் வேலை பார்த்த இடத்திலும் காசு இல்லை என்று கூறிவிட்டார்கள். எனவே நான் என் ஊருக்குப் போவதுதான் நல்லது. ஆனால், நடந்து செல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை" என்கிறார் 35 வயதான தன்ராஜ்.
மேற்கு தில்லியின் நஜப்கர் பகுதியிலிருந்து, உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் ஃபதேப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு செல்ல 570 கிலோ மீட்டர் நடக்க வேண்டும். கட்டுமான இடங்களில் இரும்புக் கம்பிகளைப் பொறுத்தும் வேலையைச் செய்து கொண்டிருந்த அவர், நாள் ஒன்றுக்கு 300- 400 ரூபாய் வரை சம்பாதித்துக் கொண்டிருந்தார்.
"நான் அகமதாபாத்தில் இருந்து வருகிறேன். என் வீடு உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் இருக்கிறது. எனக்கு அகமதாபாத்தை விட்டு தற்போதைக்கு வர விருப்பம் இல்லை என்றாலும். என்னை வேலையில் வைத்திருந்த நபர் காசு கொடுக்க மறுத்துவிட்டார். கடந்த மூன்று நாட்களாக சரியாக சாப்பிடவில்லை" என்று கூறுகிறார் ராஜஸ்தான் ஜெய்பூரில் தற்போது இருக்கும் ஒரு கூலித் தொழிலாளி.
தில்லியிலும் தில்லியைச் சுற்றிலும் பணியாற்றும் உ.பி., ராஜஸ்தான், ம.பி., பிஹார் மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானவர்களின் கதை ஏறக்குறைய இப்படித்தான் இருக்கிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் மூடப்பட்டதும் இந்திய தலைநகர் டெல்லியிலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கூட்டம் கூட்டமாக நடக்க ஆரம்பித்துள்ளனர்.
தில்லியில் வாழும் காய்கறி விற்பவர்கள், ரிக்ஷா ஓட்டுபவர்கள், கட்டுமான தொழிலாளர்கள் பலரும் அருகில் உள்ள உத்தரப்பிரதேசம், பிகார் போன்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக மூட்டை முடிச்சுடன் நேற்று தில்லியிலிருந்து புறப்பட்டு காசிபூர் வழியாக உத்தரப்பிரதேசத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 10,000 பேர் தில்லி எல்லையைக் கடந்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தில்லி - உத்தர பிரதேச எல்லையான காசிபூரில் அரசு ஏற்பாடு செய்த சிறப்பு பேருந்துக்காக நூற்றுக்கணக்கில் ஆட்கள் காத்திருப்பதாக ஏஎன்ஐ கூறுகிறது.
இந்நிலையில் ஆயிரக்கணக்கானோர் உண்ண உணவு மற்றும் அருந்த தண்ணீர் இல்லாமல் தவிப்பதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து ட்வீட் செய்திருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுமக்கள், காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள், பயணம் மேற்கொண்டிருக்கும் தொழிலாளர் மக்களுக்கு உணவு மற்றும் தங்கும் இடம் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும், இவ்வாறு ஆயிரக்கணக்கான மக்கள் இப்படி பயணிக்கும் அவல ஏற்பட்டதற்கு அரசாங்கம்தான் பொறுப்பு. இது மிகப்பெரிய குற்றம். பெரிய துன்பம் ஏதும் நேர்வதற்குள் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
கொரோனா வைரஸ்: 900 கி.மீ நடந்து சொந்த ஊருக்கு செல்லும் கூலித் தொழிலாளர்கள் - இந்திய சோகம்