கார்த்திக் நீலகிரி
5000 வருடத்திற்கு முற்பட்ட ஹரப்பன் காலத்தில், அதாவது கிமு 2600 வாக்கில், சிந்து பகுதி இன்று போல் காய்ந்திருக்கவில்லை. அடர்ந்த காடுகள் நிறைந்திருந்தன. ஹரப்பன் முத்திரைகளில் சிங்கம், மான், முயல்கள் மற்றும் மயில்கள் காணக் கிடைக்கின்றன. அவர்கள் பசுவையும் எருதுகளையும் பழக்கியிருக்கிறார்கள். மேலும் யானை, ஒட்டகம், பன்றிகளைப் பற்றியும் அறிந்திருந்திருக்கிறார்கள்.
கலக்கலான உணவு உண்டிருக்கிறார்கள். சைவம் என்று எடுத்துக்கொண்டால் கோதுமை, பார்லி, அரிசி, கொண்டைக்கடலை, பட்டாணி, முலாம்பழம், பேரிச்சம் பழம், berry (இதற்கு தமிழ் வார்த்தை தெரியவில்லை), தேங்காய், வாழைப்பழம், மாதுளை மற்றும் பூண்டு என்று சாப்பிட்டிருக்கிறார்கள். அனைத்திலும் கடுகு எண்ணெய் மற்றும் எள் எண்ணெய் உபயோகித்திருக்கிறார்கள். அசைவம் என்று எடுத்துக்கொண்டால் இன்னும் அதகளம். ஆடு, மாடு, பன்றி, பறவைகள், மீன்கள், கடல் ஆமை என்று எதையும் விட்டு வைக்கவில்லை. அவ்வப்போது கறியல் (gharial) எனப்படும் நீளமூக்கு முதலைகளையும் சாப்பிட்டிருக்கிறார்கள். ஆரியர்கள் வருவதற்கு முன்பு இந்தியாவின் உண்மையான முன்னோர்கள் சாப்பிட்டது இவைதான்.
தங்கம், வெள்ளி, செப்பு மற்றும் வெண்கலம் என்று விதவிதமாக நகை செய்து தங்களை அழகுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கிமு 1500 வாக்கில் ஹரப்பன் நாகரீகம் சரியத் தொடங்கியது. அதற்கு சில காரணங்கள் அவதானிக்கப்படுகின்றன. சிந்து நதி தன் பாதை மாறி இருக்கலாம். அல்லது சிந்து நதியின் மிகப்பெரிய கிளைநதியான கக்கர் (Ghagghar) காய்ந்து போய் இருக்கலாம். இதனாலேயே நதி சார்ந்த ஹரப்பன் நாகரிகம் முடிவுற்று இருக்கலாம். நீண்ட வறட்சி, நிலநடுக்கம் அல்லது வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களாலும் அழிந்து இருக்கலாம். சிலருக்கு வித்தியாசமான ஒரு கருத்து இருக்கிறது. அதாவது மரங்களை வெட்டி, அதன் விறகுகளை எரித்து செங்கல் தயாரிக்க பயன்படுத்தியதாலும் காடுகள் அழிந்து இந்த நாகரிகம் அழிந்திருக்கலாம். First known example of negative effects of deforestation. மேலும், மேற்கில் இருந்து ஆப்கானிஸ்தான் வழியாக வந்த ஆரியர்கள் ஹரப்பன் நகரங்களை தாக்கி அவர்களை விரட்டி இருக்கலாம். தங்கள் கால்நடைகளுக்கு தேவையான வளமான புல்வெளிகளை தேடி அலை அலையாக வந்த ஆரியர்கள் கொஞ்சம் கொஞ்சமாகவோ அல்லது ஏதாவது ஒரு பெரிய போரிலோ ஹரப்பன் மக்களை வென்றிருக்கலாம். அப்படி இருந்தால் ஆரியர்கள்தான் இந்தியாவின் உண்மையான வந்தேறிகள்.
[A children's history of India]